அமலாக்க இயக்குனரகம் முன், இன்று ஆஜராகவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்; கைது செய்யப்படலாம் என AAP சந்தேகம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், இன்று காலை 11 மணிக்கு அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது.
எனினும், விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மணீஷ் சிசோடியாவின், ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த சில மணி நேரங்களில், இந்த வழக்கில் பணமோசடி கோணத்தை விசாரிக்கும் அமலாக்கத்துறையினரால், டெல்லி முதல்வருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கில், சட்டவிரோதமாக 338 கோடி பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
card 2
மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்கட்சிகள் கண்டனம்
இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன், அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலையும் ஒடுக்க அவர்கள் (பாஜக) முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர்கள் சதி செய்கிறார்கள்." எனக்கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் கைது செய்யப்படுவர் என அக்கட்சியின் அமைச்சர் அதிஷியும் கூறினார்.
அவர் விசாரணைக்குப் பிறகு காவலில் எடுக்கப்படுவார் என்றும், அதற்கு காரணம், கெஜ்ரிவால், ஆளும் பாஜகவுக்கு எதிராக பேசியதற்காக மட்டுமே அன்றி, அவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என கூறினார்.