சர்ச்சையில் சிக்கியுள்ள ஆரவல்லி மலைத்தொடர்: புதிய விதியால் 90% மலைகள் மாயமாகும் அபாயம்?
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரை வரையறுப்பதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தினால் 90 சதவீத மலைக்குன்றுகள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுரங்க தொழிலுக்கு தாரைவார்க்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரையறையின்படி, தரையிலிருந்து 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உயரம் கொண்டவை மட்டுமே இனி 'ஆரவல்லி மலைகளாக' அங்கீகரிக்கப்படும். இத்தகைய மலைகள் ஒன்றுக்கொன்று 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் மட்டுமே அது 'மலைத்தொடராக' கருதப்படும். மத்திய அரசின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டதை அடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.
குற்றச்சாட்டு
சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு
இந்த விதியால், ஆரவல்லியில் உள்ள சுமார் 12,000 குன்றுகளில் வெறும் 8 சதவீத மலைகள் மட்டுமே பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெறும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். "குறைந்த உயரம் கொண்ட குன்றுகள்தான் நிலத்தடி நீரை சேமிப்பதிலும், தார் பாலைவனம் பரவாமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் புதிய வரையறை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், சுரங்க மாஃபியாக்களுக்கும் மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டும் செயல்" என ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டெல்லியின் 'பசுமை நுரையீரல்' என அழைக்கப்படும் இந்தப் பகுதி சிதைக்கப்பட்டால், வட இந்தியா கடும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சந்திக்கும். இந்த மலைத்தொடர் தென்மேற்கில் குஜராத்திலிருந்து வடகிழக்கில் டெல்லி வரை நீண்டுள்ளது, மொத்த நீளம் சுமார் 670-700+ கிலோமீட்டர்கள்.
விளக்கம்
மத்திய அரசின் விளக்கம்
சர்ச்சைகள் வலுத்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதன்படி, ஆரவல்லியின் 90 சதவீத நிலப்பரப்பு தொடர்ந்து முழுமையான பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கும். மொத்த மலைத்தொடரில் வெறும் 0.19 சதவீத பகுதி மட்டுமே சுரங்க பணிகளுக்கு தகுதியானது என அவர் விளக்கமளித்துள்ளார். அந்த 0.19% இல் கூட, விதிவிலக்கான மற்றும் அறிவியல் பூர்வமாக நியாயப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் சுரங்கம் அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 100 மீட்டர் என்பது மலையின் உச்சியை மட்டும் குறிப்பதல்ல; அதன் அடிப்பகுதி மற்றும் சரிவுகளையும் உள்ளடக்கியது. எனவே, மலையின் எந்த பகுதியிலும் முறையற்ற சுரங்க வேலைகள் நடைபெறாது என அவர் உறுதியளித்துள்ளார்.