
விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
செய்தி முன்னோட்டம்
பெங்களூர் ராஜாஜி நகரில், என்.பி.எஸ். என்னும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
அங்கு பணிபுரிவோர் நேற்று காலை 11.30 மணியளவில் இ-மெயில்'களை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வந்திருந்த ஒரு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டிருந்தது.
அதில் 'பள்ளி வளாகத்தில் நான்கு ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டுள்ளது, அவைகள் வெடித்து சிதறும்' என்று குறிப்பிட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் பசவேஸ்வர நகர் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலை பெற்ற போலீசார் உடனடியாக அங்கு வந்தனர்.
சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அறிக்கை
பள்ளியை ஆய்வு செய்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர்
பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கு வந்த போலீசார் பள்ளி வளாகத்திற்குள்ளே இருந்த மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆய்வு செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் பின்னரே, வெடிகுண்டு மிரட்டல் உண்மையல்ல என்பது தெரியவந்தது.
மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை வைத்து போலீசார் விசாரித்ததில் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவன் விளைவுகள் அறியாமல் விளையாட்டாக மிரட்டி இ-மெயில் அனுப்பியது தெரியவந்துள்ளது.
இது குறித்த அறிக்கை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை காவல் ஆணையாளர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.