
பிரமாண்ட பதவியேற்பு விழாக்களுக்கு தயாராகும் ஆந்திரா மற்றும் ஒடிசா; பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா தங்கள் புதிய முதல்வர்களை வரவேற்க தயாராகி வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக காலையில் பதவியேற்கவுள்ள நிலையில், மாலையில் பழங்குடியினத் தலைவர் மோகன் சரண் மாஜி ஒடிசாவின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும், பிரதமர் மோடி தலைமையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவின் மேதா ஐடி பார்க் அருகே காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். அவருடன், மற்ற தலைவர்களும் பதவியேற்க வாய்ப்புள்ளது. கூடவே, துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் பொறுப்பேற்பார் எனக்கூறப்படுகிறது.
கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்கள்
ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
பவன் கல்யாணின் மூத்த சகோதரரான நடிகர் சிரஞ்சீவி, அவரின் மகனும், நடிகருமான ராம் சரண் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது. இந்த விழாவிற்க்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மருமகன் ஜூனியர் என்டிஆருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.