பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது
செய்தி முன்னோட்டம்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள மொகாமா தொகுதியின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக அனந்த் சிங் உள்ளார். துலார் சந்த் யாதவ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்ட அனந்த் சிங், பாட்னா காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேய சர்மாவின் உத்தரவின் பேரில், பாட்னாவில் உள்ள தனது பார்த் இல்லத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) கைது செய்யப்பட்டார்.
ஜன சூராஜ்
ஜன சூராஜ் கைதுக்கு வரவேற்பு
ஜன சூராஜ் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்காக துலார் சந்த் யாதவ் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது வியாழக்கிழமை அன்று கொல்லப்பட்டார். அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் ஜன சூராஜ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அனந்த் சிங் பின்னர் ஒப்புக்கொண்டாலும், தனது அரசியல் எதிரியான சூரஜ் பானை அவர் குற்றம் சாட்டினார். கைதுக்கு, ஜன சூராஜ் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, "அனந்த் சிங் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார். பாட்னா வாக்காளர்களுக்கு அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும். அச்சமின்றி வந்து வாக்களிக்கும்படி நான் உறுதியளிக்கிறேன்." என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.