புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்
வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மூன்று நுழைவாயில்கள் இருக்கும். இந்த நுழைவாயில்களுக்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பழைய நாடாளுமன்ற கட்டிடம் 'பார்லிமென்ட் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. அதை போல் இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்பட வாய்ப்பிருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதைய பாஜக அரசு, கடந்த செப்டம்பரில் 'காலனித்துவ மனநிலையை' நீக்குவதாக கூறி குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாலையான 'ராஜ்பாத்தின்' பெயரைக் கூட 'கர்தவ்யாபத்' என்று மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகாத்மா காந்தி, சாணக்கியர், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்களின் கிரானைட் சிலைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நான்கு மாடி கட்டிடத்தில் 1,224 எம்.பி.க்கள் தங்கலாம். இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும். அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் பதிப்பு, அரசியலமைப்பு மண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.