15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பிறகு இன்று (அக்டோபர் 7) பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, செப்டம்பர் 19ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, செப்டம்பர் 28 முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. முதலில் அக்டோபர் 3 பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் காரணமாக அக்டோபர் 6 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
மாணவர்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.