இருமல் மருந்து உள்ளிட்ட அனைத்து 'சிரப்'களுக்கும் டாக்டர் சீட்டு கட்டாயம்:மத்திய அரசின் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான 'சிரப்' மருந்துகளையும் OTC - Over The Counter முறையில் நேரடியாக விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, இனி மருந்தகங்களில் எந்தவொரு சிரப் மருந்தையும் வாங்க வேண்டுமானால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் தகுதிவாய்ந்த பரிந்துரைச் சீட்டை (Prescription) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம்
சட்ட திருத்தம் என்ன சொல்கிறது?
மத்திய அரசு மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026 மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த 'சிரப்ஸ்' என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறைப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. டிரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு (DTAB) உடன் கலந்தாலோசித்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பின்னணி
மாற்றத்திற்கான பின்னணி மற்றும் காரணங்கள்
கடந்த ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தரமற்ற மற்றும் அசுத்தமான இருமல் மருந்துகளைக் குடித்த சில குழந்தைகள் சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை தீவிர கவலைகளை எழுப்பியிருந்தன. இதன் பின்னணியிலேயே மத்திய அரசு இக்கடுமையான முடிவை எடுத்துள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மருத்துவர் ஆலோசனையின்றி சுய மருத்துவம் மூலம் சிரப்களைப் பயன்படுத்துவதால் ஆபத்துகள் ஏற்படுகின்றன.