தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது
கடந்த ஒருமாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள். இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முன்னதாக ஒருகிலோ தக்காளி ரூ.120ல் இருந்து ரூ.160வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவர தக்காளி கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு 62 பண்ணை பசுமை கடைகள், நடமாடும் காய்கறி அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முதற்கட்டமாக 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 500 கடைகளில் தக்காளி விற்பனையானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்
கடந்த 2 வாரங்களாக வெளிமாநிலங்களில் இருந்து தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்ட காரணத்தினால் விலை சற்று குறைந்திருந்தது. இச்சூழலில் சில தினங்களாக தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளியின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தக்காளியின் வரத்துக்குறைந்து, விலையும் அதிகரித்தது. கடந்த 2 தினங்களின் விவரப்படி, சில்லறை கடைகளில் தக்காளி விற்பனை ரூ.200 வரை விற்கபட்டு வருகிறதாம். இந்நிலையில் நேற்று(ஜூலை.,31)சென்னை தலைமை செயலகத்தில் இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் தமிழகத்தில் ஏற்கனவே 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் 200 கடைகளில் விற்பனை இன்று(ஆகஸ்ட்.,1) முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.