LOADING...
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்
விமான விபத்திற்கு, அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன

அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
03:12 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை பார்மதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, பார்வைத் திறன் திடீரென குறைந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விமான விபத்தின் தாக்கம் மற்றும் விபத்திற்கு பின் ஏற்பட்ட பயங்கர தீயினால், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்து போயிருந்தன.

விவரங்கள்

உருக வைக்கும் அடையாள சோதனைகள்

விமானத்தில் பயணித்தவர்கள் உடல்களை எப்படி அடையாளம் கண்டனர் என்பது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் அந்த தகவல்களின் படி, அஜித் பவாரின் உடல், அவரது கைக்கடிகாரம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்தே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. அவருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகளின் உடல்களும் அவர்கள் வைத்திருந்த தனிப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளை கொண்டே அடையாளம் காணப்பட்டன.

விசாரணை

விபத்து குறித்து DGCA விசாரணை

விபத்துக்குள்ளான 'பாம்பார்டியர் லியர்ஜெட் 45' (Bombardier Learjet 45) விமானத்தின் சிதைந்த பாகங்களைச் சேகரித்துள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. குறிப்பாக, விமானத்தின் 'பிளாக் பாக்ஸ்' (Flight Data Recorder) மற்றும் 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' (Cockpit Voice Recorder) ஆகியவற்றிலிருந்து தரவுகளை பெறுவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Advertisement

அரசியல்

அதிர்ச்சியில் மகாராஷ்டிரா

66 வயதான அஜித் பவார், மாநிலத்தின் மிகச் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவரது திடீர் மறைவு மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் உலுக்கியுள்ளது. அவரது இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் துக்க அனுசரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 நாட்கள் அரசு துக்கமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement