மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானங்கள் புறப்பட்டு சென்றது. மொரேனா மாவட்டத்தில் இரண்டு விமானங்களும் அதிவேகமாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான விமானங்கள் இரண்டும் தீ பிடித்து எரிய துவங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக நடந்த பயிற்சியின் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப்படை விமானி ஒருவர் உயிரிழந்ததாக செய்தி நிறுவனம் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படை விமானி உயிரிழந்த சம்பவம்-இரங்கல் தெரிவித்த இந்திய விமானப்படை
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பாத்பூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட்விமானம் ஒன்றும் இன்று(ஜன.,28) விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானங்கள் விழுந்த இடங்களில் மீட்புபடைகள் வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள். சுகோய் விமானத்தில் இருவரும், மிராஜ் 2000விமானத்தில் ஒருவர் என மொத்தம் 3விமானிகள் பயணித்துள்ளனர். இதில் இருவர் உயிர்தப்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து, இரண்டு போர் விமானங்கள் நடுவானில் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொள்ள விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இதில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக எல்லா வான் போராளிகளும், சகோதரர்களும் நிற்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.