சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்
தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நினைவிற்கு வரும். அதன்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்டிகையை வெடிகள் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், இன்று(நவ.,12) காலை 6 மணி முதல் 7 மணி வரை வெடிக்கலாம் என்றும், அதேபோல் இரவு மணிக்கு துவங்கி 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் அரசு தெரிவித்திருந்தது. பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தவிர்த்து மற்ற நேரங்களில் வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி தமிழக காவல்துறை இதற்கான தனி படைகளையும் அமைத்துள்ளது.
காற்றின் மாசு இயல்பு நிலையினை தாண்டியுள்ளதாக தகவல்
எனினும், இன்று காலை முதலே தமிழகத்தில் தீபாவளி காரணமாக காற்றுமாசு அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சென்னையில் காற்றின் மாசு அளவு தரக்குறியீடு எண்.,100ஐ தாண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. 100-வரை மட்டுமே இயல்பான காற்று மாசின் அளவாகும், 100ல் இருந்து 200 வரை மிதமான காற்று மாசு. 201ல் இருந்து 300 வரை அதிக மாசுபாடு, 301ல் இருந்து 400 வரை மிக அதிக மாசுபாடு, 401ல் இருந்து 500 வரை இருந்தால் அது அபாயகரமான மாசுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் அரும்பாக்கம்-159, வேளச்சேரி-117, பெருங்குடி-178, ராயபுரம்-115, என அனைத்து இடங்களிலும் காற்றின் மாசுபாடு 100க்கு மேல் தான் உள்ளது. இதனையடுத்து சென்னையில் மிதமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.