ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி
விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. அந்த பயணி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் "பயணி ஒருவரின் கட்டுக்கடங்காத நடத்தை" காரணமாக சிறிது நேரத்திலேயே திரும்பியது என்று ஏர் இந்தியா இன்று(ஏப்-10) தெரிவித்துள்ளது. "எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், பயணி ஒருவர் இரண்டு விமான பணியாளர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்தார். இதனால் விமானத்தை டெல்லிக்கு திருப்ப முடிவு செய்யப்பட்டது. தரையிறங்கியதும் அந்த பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையிலும் அவருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று ஏர் இந்தியா விமானம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்: ஏர் இந்தியா
"விமானத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஏர் இந்தியாவிற்கு மிக முக்கியம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அந்த விமானம் மீண்டும் இன்று மதியம் லண்டனுக்கு புறப்படும்." என்று ஏர் இந்தியா மேலும் கூறி இருந்தது. இதே போன்ற இன்னொரு சம்பவம் சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது. அப்போது, மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் சகபயணியான ஒரு பெண்ணின் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.