LOADING...
MLA பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்; அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்யும் 5வது எம்.எல்.ஏ!
MLA பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

MLA பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்; அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்யும் 5வது எம்.எல்.ஏ!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. 108 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து தவித்து வரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான சி. விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

எதிர்வினை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்த எக்ஸ் (X) பதிவுகள்

கடந்த சில தினங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த சி. விஜயபாஸ்கர், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தொடர் பதிவுகள் அக்கட்சியில் பெரும் புயலைக் கிளப்பின. நேற்று, "உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. 'வெற்றிக்கான பாதை அல்ல.' வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல... எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்." இன்று காலை,"தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல... 'அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு' உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை mதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?"என பதிவிட்டிருந்தார்.

பின்னணி

அதிமுகவின் தற்போதைய உட்கட்சி பூசல் பின்னணி

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்தது. குறிப்பாக, தேர்தல் தோல்விக்குப் பின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டிலும் தங்கவைக்கப்பட்டனர். தவெக அரசு கொண்டு வந்த பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவை மீறி சி.வி. சண்முகம் தலைமையில் சி. விஜயபாஸ்கர் உட்பட 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க இபிஎஸ் முயன்றார். பின்னர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்கள் இபிஎஸ்ஸுடன் சமாதானமாகி மன்னிப்புக் கடிதம் அளித்தனர்.

Advertisement

நடவடிக்கை

விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட மூவ் என்ன?

ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கரும் அதே பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகியுள்ள சி. விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய பாதையிலேயே தனது அரசியல் பயணம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஆளுங்கட்சியான தவெக-வில் இணையப் போகிறாரா அல்லது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள திமுக-வில் ஐக்கியமாகப் போகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement