பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் G20 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று(செப் 8) புது டெல்லி வந்தடைந்தார். இந்த மெகா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 2023இல் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் பாராட்டினர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி, இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குவாட் குழுவின் முக்கியத்துவம் குறித்து பேசிய இந்திய-அமெரிக்க தலைவர்கள்
இந்தியாவின் G20 பிரசிடென்சியைப் பாராட்டிய அதிபர் பைடன், புது டெல்லியில் நடைபெறும் G20 தலைவர்களின் உச்சிமாநாடு நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2024ல் அடுத்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய, மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதில் குவாட் குழுவின் முக்கியத்துவத்தை இரு தலைவர்கள் உறுதி செய்தனர். வர்த்தக இணைப்பு மற்றும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிக்கு இணை-தலைமை தாங்கும் அமெரிக்காவின் முடிவை இந்தியா வரவேற்றது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான இந்தியாவுக்கு அதிபர் பைடன் தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், 2028-29 ஆம் ஆண்டின் UNSC நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இரு தலைவர்களும் தங்களுடைய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான இந்திய-அமெரிக்க முன்முயற்சியை(iCET) ஜோ பைடன் பாராட்டினர். iCETஇன் இடைக்கால மதிப்பாய்வு செப்டம்பர் 2023இல் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 வெற்றிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைகளை அதிபர் பைடன் வாழ்த்தினார். மேலும், விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சிகளை செய்ய இரு நாடுகளும் விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் 6ஜி அலையன்ஸ் மற்றும் நெக்ஸ்ட் ஜி அலையன்ஸுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பான தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்பு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. விண்வெளி மற்றும் AI போன்ற வளர்ந்து வரும் துறைகளில், தங்களின் முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும் பன்முகப்படுத்தவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.
கார்பன் உமிழ்வை தடுப்பதற்கு உறுதி பூண்ட இந்தியா-அமெரிக்கா
மேலும், அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாட்டை அதிகரிக்க, இரு நாடுகளும் ஆகஸ்ட் 2023இல் இந்தியா-அமெரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் செயல் தளத்தை(RE-TAP) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியாக உள்ளனர். அவர்களின் விவாதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி போக்குவரத்து துறையை டிகார்பனைசேஷன் செய்வது குறித்து இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10,000 மின்சார பேருந்துகளை வாங்குவது உட்பட, இந்தியாவில் மின்சார போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.