அக்னிவீர் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தியின் குற்றசாட்டையடுத்து இந்திய ராணுவம் விளக்கம்
அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்று நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகப் பதிவில் கூறியதை அடுத்து இந்திய ராணுவத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு 98 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. "சமூக வலைதளங்களில் சில பதிவுகள், பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. 98.39 லட்சம் செலுத்தப்பட்டது" என்று இராணுவ அறிக்கை கூறுகிறது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டும், ராஜ்நாத் சிங்கின் பதிலும்
அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் பொய் கூறியதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் கணக்கில் வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே ராணுவத்தின் அறிக்கை வந்துள்ளது. இந்த வீடியோவில் அஜய் குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எந்த இழப்பீடும் பெறவில்லை என்று கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மக்களவையில் திங்கள்கிழமை பேசிய ராகுல், அக்னிவீரர்களை "பயன்படுத்தி- தூக்கி எரியும் தொழிலாளர்கள் போல" அரசாங்கம் கருதுவதாகவும், அவர்களுக்கு "ஷாஹீத்" (தியாகி) அந்தஸ்தைக் கூட வழங்கவில்லை என்றும் கூறினார். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது என்றும், பணியின் போது உயிரைக் கொடுக்கும் அக்னிவீரனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு கிடைக்கும் என்றும் கூறினார்.