
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்.
அப்போது கொரோனா பாதிப்பு குறித்து கூறுகையில், தற்போதைய நிலையில் கேரளா மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவ கட்டமைப்பு குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்வு நாடு முழுவதும் விரைவில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லாக்டவுன் இல்லை
பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாக தகவல்
மேலும் பேசிய அவர், விமான நிலையங்களில் ரேண்டம் முறைகளில் 2% பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினந்தோறும் விமான நிலையங்களில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான முறையில் அதிகரித்து வருவதால், கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அவர், தமிழகத்தில் க்ளஸ்டர் பாதிப்பு இல்லை, தனிநபர் பாதிப்பு தான் காணப்படுகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்படுகிறது.
சிகிச்சைக்கு தேவைப்படும் அளவிற்கு ஆக்சிஜனும் உள்ளது என்று கூறினார்.
இதனையடுத்து அவரிடம் மீண்டும் லாக்டவுன் தமிழகத்தில் போடப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என்று பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.