சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதீத வேகத்தில் செல்வதால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி எதிரில் வரும் அப்பாவி பொதுமக்களும் இதில் சிக்கி மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த சம்பவங்கள் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் இதில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுப்பதோடு, பைக்குகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் கிடைத்ததன் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டார்கள். அதன்படி நேற்று(ஏப்ரல்.,19) அதிகாலை 1.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, வெலிங்டன் சாலை, ஸ்பென்சர் போன்ற முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சினிமா பாணியில் அந்த இளைஞர்களை விரட்டி, மடக்கி பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து 16 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட இளைஞர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.