விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்காக மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையில் மின்விசிறி, கட்டில், மெத்தை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் முதல் வகுப்பு கைதி என்பதால் சிறையின் உள்ளேயுள்ள 'லாக் அப்' அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கும் கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி உள்ளிட்ட வசதிகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம்
அதன்பின்னர் அவர் கடந்த 12ம்தேதி மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது உடல்நிலை சீராக தான் இருந்தது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் விசாரணை முடிந்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பொழுதும் அவர் தானாக மாடிப்படிக்கட்டுகளில் இறங்கி வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட லாக்-அப் அறையில் அடைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை சிறையிலுள்ள மருத்துவமனையில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், "வரும் ஆகஸ்ட்.,25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர்.