மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தீர்மானிப்பதற்கான முக்கிய கூட்டம் நேற்று இரவு 11 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்காமல், பாஜக வேட்பாளர்களில் ஒரு பகுதியைக் வெளியிட அக்கட்சி விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா?
நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்தி பேசும் மாநிலங்களான உ.பி., உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் குறித்தும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வேட்பாளர்கள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மாநில கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால், ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று மதியத்திற்கு பிறகு வெளியாகும் என்று பேசப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் எப்போதும் போல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.