LOADING...
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு?
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2025
01:40 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை வளாகத்துக்கு இன்று வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,"இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்" என்று மட்டும் கூறி, அடுத்தகட்ட முடிவை நாளை அறிவிக்கவுள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி, கட்சி தலைமைக்கு காலக்கெடுவும் விதித்ததாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல் அதை தொடர்ந்து நீக்கம்

கட்சி தலைமைக்கு எதிராக அவர் செயல்பட்டதாக செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார் என யூகங்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் பயணம்

செங்கோட்டையனின் அரசியல் பயணம் ஒரு பார்வை

செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். இவர் 1977 முதல் 10 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று 9 முறை எம்எல்ஏவாக ஈரோடு மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது, இவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோது, இவருக்கு வேளாண் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும், சில மாதங்களிலேயே அப் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகே இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது.