பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள்
தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு அதிமுக கட்சியினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று(ஜூன்.,13) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாஜக'வுடன் கூட்டணி வேண்டாம் என்ற ஒருமித்த கருத்தினை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைமையிடம் வலியுறுத்தவும் அவர்கள் இக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கண்டனம் தெரிவித்து தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
கூட்டணி மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி கே பழனிசாமி, "அண்ணாமலை பொதுவெளியில் உள்நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை முன்வைத்து பேசியுள்ளார். இவரின் பேச்சு அதிமுக கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, மோடி, உள்ளிட்டோர் ஜெயலலிதா மீது மரியாதை கொணடவர்கள். அதன்படி, பாஜக'வின் மேலிடத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் கூட்டணியினை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.