LOADING...
அ.தி.மு.க-வுக்கு அடுத்த அதிர்ச்சி: 24 மணிநேரத்தில் 4-வது விக்கெட்? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா

அ.தி.மு.க-வுக்கு அடுத்த அதிர்ச்சி: 24 மணிநேரத்தில் 4-வது விக்கெட்? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
12:44 pm

செய்தி முன்னோட்டம்

தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் த.வெ.க-வின் அசுர வளர்ச்சி காரணமாகப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (ஜெயக்குமார் -பெருந்துறை, சத்யாபாமா -தாராபுரம், மரகதம் குமரவேல் -மதுராந்தகம்) தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்தனர். இந்த அதிரடி திருப்பத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த கோட்டையையும் அதிர வைத்துள்ளது.

அரசியல் பாதை

இசக்கி சுப்பையா: கடந்து வந்த அரசியல் பாதை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இசக்கி சுப்பையாவை, கடந்த 2011-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முதலாக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட வைத்து அரசியலுக்குக் கொண்டு வந்தார். 2011 தேர்தலில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் டி.டி.வி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின்னர் 2019-ல் மீண்டும் அ.தி.மு.க தாய் கழகத்திற்கே திரும்பினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களுக்குத் தனது சொந்தச் செலவில் உணவுகள், காய்கறிகள், கிரிக்கெட் கிட்கள் வழங்கி 'தொகுதியின் செல்லப்பிள்ளை' எனப் பெயர் எடுத்தார். 2021 & 2026-இல், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு நெருக்கமானவராக வலம் வந்தார்.

நிராகரிப்பு

ராஜினாமா கடிதத்தை நிராகரித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 3-வது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்வாகியுள்ள இசக்கி சுப்பையா, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அவரது கடிதத்தை ஏற்க சபாநாயகர் அதிரடியாக மறுத்துவிட்டார். "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யும்போது, அதற்கான கடிதத்தைத் தங்களது சொந்தக் கையெழுத்தில் எழுதி, நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். கணினியில் டைப் செய்யப்பட்டு, அதில் கையெழுத்திடப்பட்ட கடிதங்களைச் சட்டமன்ற விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள்ள முடியாது." இதனால் இசக்கி சுப்பையா மீண்டும் தனது கைப்பட கடிதத்தை எழுதிக் கொடுப்பார் அல்லது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

Advertisement

அவசர மனு

பின்னணியில் அ.தி.மு.க கொறடாக்களின் அவசர மனு

முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சபாநாயகரை நேரில் சந்தித்து ஒரு முக்கியமான கோரிக்கை மனுவை அளித்தனர். சமீபத்தில் நடந்த த.வெ.க அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், அ.தி.மு.க-வின் கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தத் தகுதிநீக்க புகாருக்கு உள்ளான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே முன்கூட்டியே தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவதாகவும், எனவே இத்தகைய 'குதிரை பேரம்' பின்னணியில் வரும் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement