ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பௌர்ணமியை முன்னிட்டு ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை மூன்று நாளைக்கு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஆகஸ்ட் 18இல் 130 பேருந்துகளும், 19இல் 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து ஆகஸ்ட் 18இல் 30 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து ஆகஸ்ட் 19இல் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஆவணி மாத பௌர்ணமியின் சிறப்புகள்
பௌர்ணமி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம்தான். அதிலும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆவணி மாத பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால், இது ஆவணி அவிட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தினம் சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருவது இந்த நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளது. திங்கட்கிழமை வரும் பௌர்ணமியில் கிரிவலம் சென்றால் எப்படிப்பட்ட தடையும் அகலும் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பதால், இந்த சமயத்தில் திருவண்ணாமலையில் அதிக பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.