நடிகை ரன்யா ராவ் ஒவ்வொரு துபாய் பயணத்திலும் தங்கம் கடத்தி, ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்பான விசாரணையில், அவரது செயல்பாடுகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்யா, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த ஆண்டில் மட்டும் 30 முறை துபாய்க்கு பயணம் செய்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த DRI அவரை சோதனை செய்ததில் பிடிபட்டார்.
இந்த நிலையில் அவர் ஒவ்வொரு UAE பயணத்திற்கும் ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை
கைதிற்கு பின்னர் வீட்டில் சோதித்ததில் பல கோடி ரொக்கமும், நகையும் மீட்பு
கைது நடவடிக்கைக்கு பின்னர் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி, ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், ரூ.2.67 கோடி ரொக்கம் உட்பட டி.ஆர்.ஐ.யால் அவரது வசம் இருந்து ரூ.17.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரன்யாவின் வளர்ப்பு தந்தை, டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ், தனது மகள் தனது கணவருடன் பிரிந்து வசித்து வருவதாகக் கூறி, தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என தெரிவித்தார்.
சுவாரஸ்யமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் நடந்த ஒரு தங்கக் கொள்ளையில் டிஜிபி ராமச்சந்திர ராவ் தொடர்புடையவர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டுபிடிப்புகள்
தங்கக் கடத்தல் வழக்கில் வெளியான சில முக்கிய தகவல்கள்
ரன்யா ராவ், கடந்த ஆண்டில் மட்டுமே 30 முறை துபாய்க்குச் சென்று, ஏராளமான தங்கத்தை திரும்பக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட தங்கத்திற்கு ஒரு கிலோவுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் ஒரு பயணத்திற்கு சுமார் ரூ.12-13 லட்சம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலைய பாதுகாப்பைத் தவிர்ப்பதற்காக ராவ் மாற்றியமைக்கப்பட்ட ஜாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி தங்கத்தை கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்க்க ரன்யாவுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு பெரிய கடத்தல் வலையமைப்புடன் ரன்யாவுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.