சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை இன்று(மார்ச்.,27) சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர், பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்கும் விதமாக வீடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக 'மஞ்சப்பை' விநியோகத்தை தொடங்கும் குடிமை அமைப்பு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் சோதனை அடிப்படையில் 'மஞ்சப்பை' வழங்கும் திட்டம், சுயயுதவி குழுக்களுடன் இணைந்து செயல்படும். பொது மக்களிடம் இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இத்திட்டமானது மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி
தொடர்ந்து அவர், சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 20 மெட்ரிக் டன் நெகிழி கழிவுகளில் இருந்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் எண்ணெய் தயாரிக்கும் ஆலை மணலியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசுழற்சி செய்ய முடியாத உலர் கழிவுகளை விஞ்ஞான ரீதியில் எரிக்க 5 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டி ஆலை ஏற்கனவே திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மேற்கொண்டுள்ள இந்த இரண்டு பணிக்கான ஆலைகள் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னர் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று மேயர் பிரியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.