டிசம்பர் 18ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம்: ஆவின்
பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில், வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆவின் நிறுவனமானது பல புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், புதிய கிரீன் மேஜிக் ப்ளஸ் பால், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் டிசம்பர் 18, 2024 முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
கூடுதல் பால் விற்பனை நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை
"தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபப்பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது". "தமிழ்நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிள் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.