நவம்பர் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்
தமிழகத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கிறது ஆவின். இந்நிறுவனம் மூலம் ஒருநாளைக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. மேலும் இந்த பால் கொழுப்பு சத்தின் அடிப்படையில் ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட வெவ்வேறு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சைநிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் வரும் 25ம்.,தேதி முதல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்படவுள்ளது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருவாய் இழப்பு காரணமாக ஆவின் இம்முடிவினை எடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. 40 ஆண்டுகளாக விற்பனையிலுள்ள இந்நிற பால் பாக்கெட் மொத்த பால் விற்பனையில் 40%ஆகும்.
பச்சை வண்ண பால் பாக்கெட்டிற்கு மாற்றாக ஆவின் 'டிலைட்'
அதிக கொழுப்பு சத்தினை கொண்டு தயாரிக்கவேண்டும் என்னும் நோக்கில் வெளிமாநிலங்களிலிருந்து பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்கி, குறைவான விலைக்கு ஆவின் இந்த பச்சைநிற பால் பாக்கெட்டினை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் காரணமாகவே இந்த பச்சைநிற பால் பாக்கெட் விநியோகம் செய்வதில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் குறைந்தளவில் விற்பனை செய்யப்படுகிறது. படிப்படியாக இப்பகுதிகளிலும் இதன் விநியோகம் நிறுத்தப்படவுள்ள நிலையில் அதற்கு மாற்றாக ஊதா நிறத்தில் 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் 'டிலைட்' என்னும் புதுவகை ஆவின் பால்பாக்கெட் விற்பனைக்கு வந்துள்ளது.