Page Loader
அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் 
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மரங்கள் வெட்டியதாக மும்பை மெட்ரோ மீது இன்று(ஏப் 17) குற்றம்சாட்டப்பட்டது.

அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 17, 2023
04:27 pm

செய்தி முன்னோட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதால் மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு(MMRCL) உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மரங்கள் வெட்டியதாக மும்பை மெட்ரோ மீது இன்று(ஏப் 17) குற்றம்சாட்டப்பட்டது. மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டால், பொதுத் திட்டம் முடங்கும் என்பதால், 177 மரங்களை மட்டும் அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மரங்கள் வெட்டப்பட்டதற்கு பிறகு மரம் நடுதலை கண்காணிக்க ஐ.ஐ.டி-பாம்பேயில் இருந்து ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "MMRCL இரண்டு வார காலத்திற்குள், வனப் பாதுகாவலருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பாதுகாவலர் ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுதலை நிறைவு செய்ய வேண்டும்." என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

details

நீங்கள் நீதிமன்றத்தை மீற முடியாது: உச்ச நீதிமன்றம் 

"எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு ஐஐடி-பாம்பேயின் இயக்குனரைக் கேட்டுக்கொள்கிறோம். மூன்று வாரங்களில் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்." என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. "நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மீறலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் நீதிமன்றத்தை மீற முடியாது. MMRCL அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்ப வேண்டும். MMRCL இன் CEOஐ நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள்." என்று முதலில் MMRCLஐ வறுத்தெடுத்த நீதிபதிகள், 177 மரங்களை மட்டும் அகற்ற அனுமதி அளித்துள்ளனர். மெட்ரோ கார் ஷெட் திட்டத்தை செயல்படுத்த, ஆரே காட்டில் இருக்கும் 84 மரங்களை வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதித்தது. இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.