ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஷீத்தல் அங்கூரால் பாஜகவுக்கு கட்சி தாவியதனால், இந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது மீதமுள்ள 12 இடங்களுள் 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) நான்கு இடங்களிலும், தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுகவும் முன்னிலை வகிக்கின்றன.
அமர்வாராவில் பாஜக முன்னிலையில் உள்ளது
பீகாரின் ருபாலி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டல் ஒரு சுயேச்சை போட்டியாளரை விட 2,433 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காசி நிஜாமுதீன் 12,540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா இன்வதியை விட பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா 4,160 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த கமலேஷ் ஷா, மார்ச் மாதம் பாஜகவுக்கு மாறியதை அடுத்து, அந்த தொகுதி காலியானது என்பது குறிப்பிடத்தக்கது. ருபாலி மற்றும் அமர்வாரா தொகுதிகளில் மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) முன்னிலை வகிக்கிறது.