 
                                                                                சிறைவாசத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் குன்றியது, உடல் எடை குறைந்தது: ஆம் ஆத்மி
செய்தி முன்னோட்டம்
திஹார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்எடை கணிசமாக குறைந்துள்ளது என்றும், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், துணை முதல்வருமான அதிஷி கூறியுள்ளார். இதனை சிறை அதிகாரிகள் கடுமையாக மறுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து வரப்பட்டபோது அவரது எடை 55 கிலோவாக இருந்ததாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போதிருந்து தற்போது வரை, அவரது எடை, மாறாமல் உள்ளது என்றார்கள் சிறை அதிகாரிகள். எனினும், அதிஷி, முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து 4.5 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிஷி ட்வீட்
பரபரப்பை கிளப்பிய அதிஷியின் ட்வீட்
இது குறித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அதிஷி, கெஜ்ரிவாலுக்கு கடுமையான நீரிழிவு நோய் இருப்பதாகவும், இருப்பினும் அவர் தேசத்திற்கு சேவை செய்ய 24 மணி நேரமும் உழைக்கிறார் எனவும் கூறியுள்ளார். அதோடு, அவர் உடல் எடை குறைந்துள்ளதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து 4.5 கிலோ குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால், நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்றும் அதிஷி அந்த டீவீட்டில் கூறினார்.