காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லியின் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஹரியானாவிலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மேடையில் அதிஷியுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், சஞ்சய் சிங் மற்றும் கட்சியின் பிற எம்எல்ஏக்களும் உள்ளனர். உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அதிஷி, சுனிதா கெஜ்ரிவால், சஞ்சய் சிங் மற்றும் பலர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபற்றி அதிஷி, சமூக ஊடகப் பதிவில், அனைத்து முயற்சிகள் இருந்தும், ஹரியானாவின் பாஜக அரசாங்கம் டெல்லிக்கு உரிய பங்கை விடுவிக்கவில்லை என்று கூறினார்.
உண்ணாவிரத போராட்டம்
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர்
தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் நெருக்கடியை தீர்க்க தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிஷி புதன்கிழமை கடிதம் எழுதினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, டெல்லியின் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும், பிரதமர் மோடி "அரியானாவில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்" என்றும் கூறினார். "நேற்று, ஹரியானா டெல்லிக்கு 613 MGDக்கு 513 MGD (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்கள்) தண்ணீர் தந்தது. ஒரு MGD தண்ணீர் 28,500 பேருக்கு. அதாவது 28 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் இல்லை." என்று அவர் கூறினார். இதற்கிடையில், இன்று ஜாமீனில் வெளிவரவிருந்த முதல்வர் கெஜ்ரிவால், கடைசி நிமிட உயர்நீதிமன்ற தீர்ப்பால், இன்னும் திஹார் சிறையிலேயே உள்ளார்.