மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம்
மதுரை அழகர் கோயில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து இந்த திருவிழா நடக்கும் பட்சத்தில், ஒவ்வொரு நாளும் கள்ளழகர் தங்க பல்லக்கில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிலையில் இந்த திருவிழாவின் உச்சகட்ட கொண்டாட்டமான ஆடி தேரோட்டம் இன்று(ஆகஸ்ட்.,1) மிக சிறப்பாக நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த தேரோட்டத்தில், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட திருத்தேரில் சுந்தரராஜ பெருமாளுடன், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி தாயார்கள் எழுந்தருளினர். அதன்படி கோவிந்தா.. கோபாலா.. என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டு திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்பட்டது.
மாட்டு வண்டிகளில் வருகை தந்த பக்தர்கள்
இந்த தேரோட்டத்தினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர். இதனிடையே, கள்ளழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி ஆகியோரை காரைக்குடி சுற்றுவட்டார மக்கள் பலர் குலதெய்வமாக வழிபட்டு வரும் நிலையில், ஆடி மாதத்தில் அவர்கள் தங்கள் குலதெய்வத்தினை வழிபட பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்து வருவது வழக்கம். அதன்படி நேற்று(ஜூலை.,31) ஏராளமானோர் மாட்டு வண்டியில் வந்து முடி காணிக்கை செலுத்திவிட்டு, கிடா வெட்டி பொங்கல் வைத்து அன்னதானம் செய்தனர். இரவு கோயிலிலேயே தங்கிய அவர்கள் இன்று இந்த தேரோட்டத்தினை பார்த்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புவர். ஆண்டுதோறும் இந்த திருவிழாவிற்கு வருவதற்காகவே மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகளை இவர்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.