ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் சொன்ன ஓகேவால் ரூ.3 கோடியை இழந்த இந்திய ரயில்வே; நடந்தது என்ன?
சத்தீஸ்கரில் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் மனைவிக்கு சொன்ன ஓகேவால், இந்திய ரயில்வேக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. 2011 சமயத்தில், ஒருநாள் இரவு, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர், தன் மனைவியுடன் தொலைபேசியில் சண்டை போட்டுள்ளார். அதில், "நாம் வீட்டில் பேசுவோம், சரியா?" என்று கூறி போனை கட் செய்தார். ஆனால், அப்போது அவரது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதை அவர் உணரவில்லை. மறுமுனையில் இருந்த அவரது சக ஊழியர் இதை தனக்கு கிடைக்க ஓகே என்ற கிரீன் சிக்னலாக நினைத்துக் கொண்டு, சரக்கு ரயிலை மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார்.
12 வருடம் போராடி விவாகரத்து பெற்ற ஸ்டேஷன் மாஸ்டர்
அதிர்ஷ்டவசமாக, மாற்றி அனுப்பியபோது ரயிலுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், விதிகளை மீறியதற்காக இந்திய ரயில்வேக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், விசாகப்பட்டினம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். மனைவியும், கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்ததோடு, தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வழக்கையும் தனது சொந்த ஊரான துர்க்கிற்கு மாற்றினார். துர்க் நீதிமன்றம் அவரது விவாகரத்து மனுவை நிராகரித்ததால், ஸ்டேஷன் மாஸ்டர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கு மனைவியின் குற்றச்சாட்டுகளை தவறானது எனக் கண்டறிந்த நீதிமன்றம், விவாகரத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அவரது விவாகரத்துக்கான 12 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.