கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்
கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக விடுதியில் கடந்த 3ம்தேதி 17வயது மாணவி ஒருவர் தன்னறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சகமாணவிகள் மாணவியின் பெற்றோருக்கும், போலீசுக்கும் தகவலளித்தனர். தகவலறிந்து அங்குவந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் உறவினர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பேரில் போலீசார் அந்த விடுதியில் உள்ள மாணவிகளிடமும், இறந்த மாணவியின் நெருங்கிய தோழிகளிடமும் தீவிரவிசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழக முதல்வராகவும், விடுதியின் பாதுகாவலருமாக இருப்பவர் ரமேஷ். இவர் கல்லூரியில் பயிலும் சில மாணவிகளுக்கு பாலியல்தொல்லை அவ்வப்போது கொடுத்துவந்துள்ளார்.
பிஜப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த ரமேஷை கண்டறிந்து கைது செய்த போலீசார்
அதேபோல் இறந்துபோன மாணவிக்கும் அடிக்கடி அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அந்த மாணவி வேறு கல்லூரிக்கு மாற முடிவுசெய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட ரமேஷ் மாணவி வேறு கல்லூரிக்கு மாறிவிட்டால், தாம் மாட்டிக்கொள்வோம் என்று அச்சமடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ தினத்தன்று மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் மாணவியை கொன்று, தற்கொலை செய்துகொண்டது போல் தொங்கவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து அறிந்த மறுகணமே தனிப்படை போலீசார் ரமேஷின் செல்போன் சிக்னலை வைத்து, அவர் பிஜப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர். அப்பகுதிக்கு சென்று ரமேஷை கைது செய்துள்ள போலீசார் வேறு மாணவிகள் யாரேனும் இவரிடம் சிக்கி பாதிப்படைந்துள்ளார்களா என்னும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.