ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை
ஆந்திரா-ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஈடே குரு(30),இவரது கணவர் சாமுலு. இவர்கள் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ஈடே குருவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த போதிலும் அவர் குணமடையவில்லை. கணவர் சாமுலு கையில் இருந்த பணமும் தீர்ந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாத காரணத்தினால் தனது மனைவியை நேற்று(பிப்.,8) டிஸ்சார்ஜ் செய்து தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல சாமுலு முடிவெடுத்துள்ளார். தொடர்ந்து, அவர்கள் ஆந்திராவில் தங்கியிருந்த கிராமம் இங்கிருந்து 145கி.மீ., தொலைவில் உள்ளது. இதனால் ஒரு ஆட்டோவை பேசி தனது மனைவியை அதில் அழைத்து சென்றுள்ளார்.
கையில் பணமில்லாமல், மொழி தெரியாமல் தவித்த சாமுலு, உதவிய காவல்துறை
இந்நிலையில் அந்த ஆட்டோ விஜயநகர மாவட்டம் ராமாவரம் பகுதியில் வந்து கொண்டிருக்கையில், திடீரென எதிர்பாராவிதமாக ஈடேகுரு உயிரிழந்துள்ளார். இதனால் அந்த ஆட்டோஓட்டுநர் இதற்குமேல் அழைத்துசெல்ல முடியாது என்றுகூறி பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார். கையில் பணமில்லாமல், மொழியும் தெரியாமல் தவித்த சாமுலு தனது ஊருக்கு செல்ல 115கி.மீ.,இருந்த நிலையில் இறந்துபோன மனைவியை தோளில் சுமந்துகொண்டு நடக்க துவங்கியுள்ளார். எந்த திசை என்று தெரியாமல் 4 கி.மீ.கடந்த சாமுலுவை கவனித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர். உடனே அங்குவந்த போலீசார் அவருக்கு உணவு வாங்கிகொடுத்து, பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றையும் வரவழைத்துள்ளார்கள். அதில் இவர்களை ஏற்றி அவர்கள் ஊரில் விட்டுவிடக்கூறி அனுப்பி வைத்துள்ளார்கள். தனியாக தவித்த அந்த நபருக்கு உதவிய காவல்துறைக்கு பெருமளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது.