12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல்
இந்தியாவில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திருப்பி செலுத்த இன்னும் ஒரு நாளே எஞ்சி இருக்கும் நிலையில் ஆர்பிஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் திரும்ப செலுத்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து அந்த காலக்கெடு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
96% வங்கிகளுக்கு திரும்பி வந்த 2,000 ரூபாய் நோட்டுகள்
மே மாதம் ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. தற்போது 3.44 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2,000 நோட்டுகளை மாற்ற நாளையே கடைசி என்றாலும், பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் 2,000 நோட்டுகளை 20,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள முடியும். அதேசமயம் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்குகளில் வரவு வைக்க எந்த வரம்பும் இல்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.