நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டு, வெள்ளம் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்து பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் 157 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிக மோசமான மழையாக இது பார்க்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தற்போது அப்பகுதிகளில் மழை ஓய்ந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீட்பு குழு
இந்நிலையில், நெல்லையில் இதுவரை கனமழை காரணமாக உயிரிழந்துள்ளார் எண்ணிக்கை 9 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர், நீரில் மூழ்கி 2 பேர் மற்றும் மின்சாரம் தாக்கி ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தற்போது அப்பகுதியில் அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே பெருமளவிலான சேதங்களை எதிர்கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்குள் செல்ல முடியாமல் மீட்பு பணியினர் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதனால் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிர்சேதங்கள் குறித்த விவரங்கள் ஏதும் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.