விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்
டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை என்று நேற்று தகவல்கள் வெளியானது. அதன்படி, விபத்து நடந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் யாருக்கும் தகவல் அளிக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டதாக அஞ்சலியோடு பயணம் செய்ததாக கூறப்படும் நிதி என்பவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த அஞ்சலி வீட்டிற்கு டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதியளித்தனர். இவர்களை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷாதேவியும் அஞ்சலி வீட்டிற்கு சென்று அவரது தாயாரை சந்தித்துள்ளார்.
'நிதி கொடுத்துள்ள வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை'-நிர்பயா தாயார் ஆஷா தேவி
மேலும் இது குறித்து நிர்பயா தாயார் கூறுகையில், "யார் மீதும் குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை. ஆனால், நிதி கூறிய வாக்குமூலத்தை ஏற்க முடியாது. அஞ்சலி குடும்பத்துக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்" என்று கூறினார். அஞ்சலி தாயார் கூறுகையில், "நிதி யாரென்றே எனக்கு தெரியவில்லை. அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இல்லை, நிதி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏதோ சதி திட்டம் போல் தெரிகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு போலீஸ் ஆணையர் ஷாலினிசிங், சுல்தான்பூரி போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக ஆய்வு செய்கையில் விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக 9 ரோந்து வாகனங்கள் சென்றுள்ளது, ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.