ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்; 9 அம்ரித் பாரத் ரயில்களின் முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய வழித்தடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளார். குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப் பயணத்தை உறுதி செய்யும் இந்த ரயில்கள், குறிப்பாக சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தமிழகம்
தமிழகத்திற்கு மூன்று புதிய வரவுகள்
இந்த 9 ரயில்களில், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் தென்கோடியில் உள்ள நாகர்கோவில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 3 முக்கிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழித்தடங்கள் பின்வருமாறு:- நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில்: மேற்கு வங்காளத்தின் முக்கிய சந்திப்பான நியூ ஜல்பைகுரியிலிருந்து தமிழகத்தின் தென்முனையான நாகர்கோவில் வரை இந்த ரயில் இயக்கப்படும். சந்த்ராகாச்சி - தாம்பரம்: கொல்கத்தாவின் சந்த்ராகாச்சியிலிருந்து சென்னையின் நுழைவுவாயிலான தாம்பரம் வரை இந்த ரயில் பயணிகளை ஏற்றிச் செல்லும். நியூ ஜல்பைகுரி - திருச்சிராப்பள்ளி: தமிழகத்தின் மத்தியப் பகுதியான திருச்சியை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்க இந்த வழித்தடம் உதவும்.
இந்தியா
இந்தியாவின் பிற முக்கிய வழித்தடங்கள்
தமிழகம் தவிர, நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் கீழ்க்கண்ட 6 வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரயில்கள் இயங்க உள்ளன. அவை பின்வருமாறு:- ஹவுரா - ஆனந்த் விஹார் (டெல்லி): கொல்கத்தாவையும் தலைநகர் டெல்லியையும் இணைக்கும் அதிவேக வழித்தடம். குவஹாத்தி - ரோஹ்தக்: அசாம் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு. அலிபுர்துவார் - பெங்களூர் (SMVT): மேற்கு வங்கத்திலிருந்து கர்நாடகத் தலைநகருக்குச் செல்லும் ரயில். திப்ருகார் - லக்னோ (கோமதி நகர்): அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை இணைக்கும் முக்கியத் தடம். அலிபுர்துவார் - மும்பை (பன்வெல்): கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் வழித்தடம். சீல்டா - வாரணாசி: கொல்கத்தாவையும் புனித நகரமான வாரணாசியையும் இணைக்கும் ரயில்.
தனித்துவம்
அம்ரித் பாரத் ரயிலின் தனித்துவம்
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 'புஷ்-புல்' (Push-Pull) தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதாவது ரயிலின் முன்னும் பின்னும் என இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரயிலின் வேகத்தை விரைவாக அதிகரிக்கவும், குறைக்கவும் உதவும். இவை முழுவதும் குளிர்சாதன வசதி இல்லாத (Non-AC), சாதாரண படுக்கை வசதி மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளைக் கொண்டவை. குறைந்த செலவில் அதிக வசதிகளுடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு இதுவே சிறந்த தேர்வாகும்.