மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை மாற்றியமைக்கக்கூடிய முக்கியமான மூன்றடுக்கு பஞ்சாயத்துத் தேர்தல் இன்று(ஜூலை 8) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முக்கியமான பஞ்சாயத்து தேர்தல் வாக்கெடுப்பின் போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள், 1 பாஜக உறுப்பினர், 1 இடதுசாரி ஆதரவாளர், 1 சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைகளுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்தியப் படைகளின் அலட்சியமே காரணம் என்று அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகியுள்ளன
இந்த வன்முறை மோதல்களால், பலர் காயமடைந்தனர், குறைந்தது இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 22 மாவட்டங்களில் உள்ள 9,730 பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் 63,229 கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 928 இடங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 5.67 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 8ஆம் தேதி முதல், மேற்கு வங்கம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகியுள்ளன. இதனால், ஒரு இளம்பெண் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.