பாரத் கௌரவ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 80 பயணிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
சென்னை மாநகரிலிருந்து புறப்பட்ட ரயிலில், பயணிகள் 80 பேருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று(நவ.,28) புறப்பட்ட பாரத் கௌரவ் ரயிலில் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதனிடையே இந்த ரயிலில் பயணித்த சுமார் 80 பயணிகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்புற்று வாந்தி, மயக்கம், வயிற்றில் வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை கண்டு அதில் பயணித்த மற்ற பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். ஒருவேளை பயணிகள் உட்கொண்ட உணவுகள் கெட்டுப்போனதாக இருந்திருக்கக்கூடும், அதனால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்த தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், புனே ரயில் நிலையத்தில் மருத்துவ குழு சிகிச்சையளிக்க தயார் நிலையில் இருந்துள்ளனர்.
மருத்துவக்குழு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்
அதன்படி இந்த ரயிலானது நேற்று(நவ.,28)இரவு 10 மணியளவில் புனே ரயில் நிலையம் வந்தடைந்தப்பொழுது, அங்கிருந்த மருத்துவக்குழு உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணிகளை நடைமேடைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளித்துள்ளனர். அதன்பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த வகையில், பயணிகள் பாதிப்படைந்த ரயிலில் எவ்வித உணவக வசதியும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். அந்த ரயிலில் பயணித்த பயணிகள் இடையில் தான் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அந்த உணவு குறித்த விவரங்களும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, வழியில் சிலர் வழங்கிய அன்னதானத்தையும் பயணிகள் வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. தற்போது இது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.