ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல்
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 மாவட்டங்கள் கனமழை காரணமாக மிகமோசமான விதத்தில் பாதிப்படைந்துள்ளது. கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவிலான இயற்கைப்பேரிடரை ஹிமாச்சலப்பிரதேசம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 24ம்தேதி முதல் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 217பேர் இறந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, சிம்லா-சம்மர்ஹில் என்னும் பகுதியில் நேற்றுமுன்தினம்(ஆகஸ்ட்.,16)ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள தற்போதைய பலி எண்ணிக்கை 74 என்று கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல் அமைச்சர் சுக்விந்தர் சிங் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.
சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
இதுத்தொடர்பாக பேசிய அவர்,"மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒழுங்குபடுத்த ஒராண்டுகாலம் ஆகும். இதனால் சுமார் ரூ.10,000கோடி வரை சேதங்கள் ஏற்பட்டுள்ளது"என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, மத்தியஅரசின் இடைக்கால நிவாரணத்தினை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மழையால் இடிந்துவிழும் வீடுகள் அனைத்தும் பிஹாரி கலைஞர்கள் என்னும் புலம்பெயர்ந்த கட்டிடக்கலைஞர்களால் கட்டப்பட்டதாகும். வீடுகள் இடிந்துவிழ தரமின்மையும் ஓர்காரணம் என்று கூறியுள்ளார். சிம்லா,மண்டி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து மக்களை மீட்கும்பணியில், ராணுவப்படை, தேசியப்பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சிம்லா-சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு உத்தரகாண்ட்டில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.