நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, இண்டிகோ நிறுவனம் மாற்று விமானங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் விமான ரத்து காரணமாக சென்னை விமான நிலைய பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
சேவை பாதிப்பு
தொடர்ந்து இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு
இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இரண்டும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. ஆறு நாட்களில் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர், மேலும் பலர் இன்னும் பணத்தை திரும்ப பெறுவதற்கும், தங்கள் உடைமைகளை பெறுவதற்காகவும் காத்திருக்கின்றனர். தற்போது வரை, இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி பணத்தை திரும்ப அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, விமான நிறுவனம் அதன் திட்டமிடப்பட்ட 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் சுமார் 1,650 விமானங்களை இயக்கியது, அதே நேரத்தில் 650 ரத்து செய்யப்பட்டன.