கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரியில், 5வது போலீஸ் கமிஷன் முதல்வர் ஸ்டாலினால் நிறுவப்பட்டது.
இந்த கமிஷனில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. ராதாகிருஷ்ணன், பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், குழுவின் செயலாளராக இருந்தார்.
இக்குழு பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆய்வு செய்து, தங்களின் அறிக்கையை அண்மையில் முதல்வருக்கு அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பரிந்துரைகள்
கமிஷனின் பரிந்துரைகள் என்ன?
போலீஸ் கமிஷனின் பரிந்துரைப்படி, போலீஸ் கான்ஸ்டபிள்களின் சம்பளத்தை ரூ.21,700 - ரூ.69,100 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியில் மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தற்போது, கான்ஸ்டபிள் பணிக்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதி இருக்கும் நிலையில், அதனை 12ம் வகுப்பு அல்லது அதற்குரிய கல்வித் தகுதியாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1ம்- 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்க வேண்டும்.
பணி அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்களை கருத்தில் கொண்டு, காவலர்களின் மனநிலையை குறிப்பிட்ட கால இடைவேளையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்த, மாவட்ட எஸ்.பி.க்களுக்கு குறிப்புகளை வழங்கலாம் என்றும், தேவைப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கும் தனித்தனியாக தகவல் பகிரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.