மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி
இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான். இதனால் இந்த வெங்காயத்தின் விலை மிகுந்த வீழ்ச்சியை கண்டுள்ளது. அங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயங்கள் பெரும்பாலும் சோலாப்பூர் வேளாண்உற்பத்தி சந்தைக்கு கொண்டுவந்து தான் ஏலம் விடப்படும். பல வணிகர்கள் விவசாயிகளின் விளைநிலத்திற்கே சென்று பொருட்களை கொண்டுவந்து இங்கு ஏலம் விடுவார்கள். இந்நிலையில் சோலாப்பூர் பகுதியிலுள்ள போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர துக்காராம் சவான்(58), இவர் அறுவடை செய்த வெங்காயமும் சுமார் 70கிமீ தூரத்திலிருந்து சந்தைக்கு கொண்டுவந்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் இவரது வெங்காயம் தரம் குறைந்தது என்றுகூறி கிலோ வெறும் 1 ரூபாய்க்கு ஏலம் போனது என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சவான் 512கிலோ வெங்காயத்திற்கு ரூ.512 பெற்றுச்செல்லலாம் என்று எண்ணியுள்ளார்.
வெறும் ரூ.2க்கு செக் கொடுத்து திகைக்க வைத்த வேளாண் உற்பத்தி சந்தை
ஆனால் வெங்காயம் ஏற்றிவந்த வந்த வண்டிக்கூலி ரூ.509.51 என்று கூறி அதனை கழித்துவிட்டு வெறும் ரூ.2.49 காசுகள் இருப்பதாக பில்லை கொடுத்துள்ளார்கள். அதனை கண்ட சவான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பணத்தையும் செக் மூலம் கொடுத்துள்ளதோடு, அப்பணத்தை உடனே எடுக்க முடியாதவாறு 15 நாட்களுக்கு பிறகு வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் தேதி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தையும் கண்டு சவான் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெங்காயத்தை உற்பத்தி செய்ய இதுவரை ரூ.40 ஆயிரம் செலவு செய்துள்ளதாக சவான் தனது வேதனையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.