ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் என்கவுன்டர் மோடர்காம் கிராமத்தில் நடந்தது. அங்கு பாரா கமாண்டோவான லான்ஸ் நாயக் பிரதீப் நைன் கொல்லப்பட்டார். உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கிய பாதுகாப்புப் படையினர், குறைந்தது இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகளை அவர்களின் மறைவிடத்தில் வளைத்தனர். "குல்காம் மாவட்டத்தின் மோடர்காம் கிராமத்தில் என்கவுண்டர் தொடங்கியது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் இனி தான் தெரியவரும்" என்று இந்த துப்பாக்கிச் சண்டை குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்திருந்தது.
பதுங்கியிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள்
ஃபிரிசல் சின்னிகம் கிராமத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருக்கலாம் என பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு இரண்டாவது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த நடவடிக்கையின் போது 1வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் ஹவால்தார் ராஜ் குமார் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவர் அப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிகாரிகள் ஃபிரிசல் சின்னிகம் கிராமத்தை அடைந்ததும், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், துப்பாக்கிச் சண்டை மூண்டது. இரு பகுதிகளிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதற்கிடையில், காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல், வி.கே.பிர்தி, என்கவுண்டர் நடந்த இடங்களை பார்வையிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என்று கூறினார்.