LOADING...
காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது
காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது (File Photo)

காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2025
08:41 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்வு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதுடன், நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக் கருத்தாக "தமிழ் கற்போம் - தமிழைக் கற்கலாம்" என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செம்மொழியான தமிழின் செழுமையை நாடு முழுவதும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீக அறிஞர்கள் உட்பட மொத்தம் 1,400-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

சிறப்பு முயற்சிகள்

இந்திய கலாசாரத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு முயற்சி

அகத்திய முனிவர் மேற்கொண்ட பண்டைய கலாசாரப் பயணத்தின் தடத்தை பின்தொடர்ந்து, தென்காசியில் இருந்து டிசம்பர் 2-ல் புறப்பட்டு காசியில் முடிவடையும் சிறப்பு வாகனப் பயணம் இந்த ஆண்டு முதன்முறையாக தொடங்கப்படுகிறது. காசியில் உள்ள சுமார் 300 மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கவும், தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை பற்றி அறிந்துகொள்ளவும் 15 நாள் கல்விச் சுற்றுப்பயணமாக தமிழகம் வரவுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பிரதிநிதிகள், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று, கருத்தரங்குகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு, கலை ஆகியவற்றை அனுபவிப்பார்கள். இந்த நிகழ்வு, 'ஏக் பாரத் ஸ்ரேஷ்த் பாரத்' (ஒரே பாரதம் உன்னத பாரதம்) என்ற உணர்வை வலுப்படுத்துவதையும், இந்திய கலாசாரத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.