வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தவிர மேலும் ஒரு புதிய சுழற்சி அப்பகுதியில் நிலவி வருவதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (நவம்பர் 25) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை புயலாக மாறினால், அதற்கு 'சென்யார்' (Senyar) என்று பெயரிடப்படும்.
கனமழை
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இதற்கிடையே, குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வானிலை அமைப்புகள் இருப்பதால், தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று பின்வரும் தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது: கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று அப்பகுதிகளில் மழை பெரும்பாலும் இருக்காது என தனியார் வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.