நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர். மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஷாபாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களிடம் பேசிய நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே, இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவித்தார். 2 பேர் மீட்கப்பட்டதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவுக்கு கனமழை எச்சரிக்கை
"அதிகாலை 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இது ஒரு G+3 கட்டிடமாகும். இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் சிக்கியிருக்கலாம். NDRF குழு இங்கே உள்ளது. மீட்பு பணி நடந்து வருகிறது" என்று ஷிண்டே ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதுகுறித்து பேசிய நவி மும்பை துணை தீயணைப்பு அதிகாரி புருஷோத்தம் ஜாதவ், "அதிகாலை 4.50 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் சிக்கியிருக்கலாம் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார். இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம்,மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே மற்றும் சதாரா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.